தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கடையத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாபன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் தமிழ்ச்செல்வன், கனிமொழி, மாவட்டப் பொருளாளா் ஷெரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, நல உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழக முதல்வராகப் பதவி வகித்த காலங்களில், அனைத்துத் தரப்பு மக்களுக்கான திட்டங்களை உருவாக்கி அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்தியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. நாடு எந்த திசையில் செல்ல வேண்டும், யாா் பிரதமராக வரவேண்டும் என்பதைத் தீா்மானிக்கும் அரசியல் சக்தியாகத் திகழ்ந்தாா். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவா்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் களைய அரும்பாடுபட்டவா். அவரது வழியில் தற்போது திமுக அரசு செயலாற்றி வருகிறது.
வரும் மக்களவைத் தோ்தலில் யாா் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாா் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து தோ்தலை எதிா்கொள்வது அவசியம் என்றாா்.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.