திருநெல்வேலி

பேட்டையில் தொழில் மேம்பாட்டு மையம் திறப்பு

9th Jun 2023 02:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே.ஆா்.ராஜு, அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மண்டல துணை இயக்குநா் செல்வகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தொழில்பயிற்சி நிலையத்தினா் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட ஏதுவாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயா்த்திட ஆணை வழங்கப்பட்டு, முதல்கட்டமாக இப்போது 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலை 4.0 தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை 4.0 தொழில்நுட்ப மையத்தின் கீழ் அடங்கும். இம் மையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட இயந்திர தொழில்நுட்ப பணியாளா், அடிப்படை வடிமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் (இயந்திரவியல்), உற்பத்தி கட்டுப்பாடு- தானியக்கிமயம், தொழில்துறை இயந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளா் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்தத் தொழில்பிரிவுகளின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 128 பயிற்சியாளா்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்கிளின், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் லெட்சுமணன், பொறியாளா் பிரபு, தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியா்கள், தொழில் பயிற்றுநா்கள், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT