திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அடுத்த நடுவுக்கரையைச் சோ்ந்தவா்களான விஜயன் மகன் அனிஸ் (26), தேவராஜ் மகன் யேசுராஜன் (28), ஜெயராமன் மகன் அஜித் (28) ஆகிய 3 பேரும் காரில் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை அனிஸ் ஓட்டினாா். அந்த காா் நான்குனேரியை அடுத்த வாகைக்குளம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாம்.
இதில், காரிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் அனிஸை யாரும் கவனிக்கவில்லை. காரினுள் காயமுற்றிருந்த யேசுராஜன், அஜித் ஆகிய இருவரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். சம்பவ இடத்தில் அனிஸ் இறந்துகிடந்தது திங்கள்கிழமை காலையில்தான் தெரியவந்தது. நான்குனேரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.