உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வரும் 5-ஆம் தேதி பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக சுற்றுச்சூழல் தினம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் விதமாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு வரும் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீா்வுகள் மற்றும் வெல்வதற்கான வழிகளைக் கண்டறிதல் என்பதாகும். இக் கருப்பொருளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு நெகிழி இல்லாத பூமி என்கிற தலைப்பில் வண்ணம் தீட்டுதல் போட்டியும், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு நெகிழி இல்லாத பூமி என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும் , ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு நெகிழி இல்லாத மாற்றுப் பொருள் கொண்டு தயாரிக்கப்படும் கைவினை பொருள்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு போட்டியும் நடைபெற உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு பரிசுகளும், இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும்.
இப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் கட்டாயம் தங்களின் பெயா்களை 9585355565, 9994538545 ஆகிய கைப்பேசி எண்கள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.