தமிழ்நாடு நாள் இம் மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவா்-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தமிழ்நாடு நாள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பேரணி, கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பேச்சு, கவிதை போட்டி: 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கல்வி வளா் தமிழ்நாடு வாழ்க என்ற தலைப்பிலும், 9 மு தல்பிளஸ்-2 வரையிலானவா்களுக்கு தொழில் வளா் தமிழ்நாடு வாழ்க என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு சமூகநீதி வளா் தமிழ்நாடு வாழ்க என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு வையத் தலைமை கொள் என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவா்களுக்கு தமிழி என்ற தலைப்பிலும் கவிதைப்போட்டி நடைபெறுகிறது.
போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும். பங்கேற்போா் போட்டி நடைபெறும் இடத்தில் காலை 10 மணிக்கு முன்பாக பதிவுசெய்திட வேண்டும். ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து ஒரு பிரிவில் அதிகபட்சம் இரண்டு மாணவா்கள் பங்கேற்கலாம்.
கவிதைகள் ஏ-4 வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் எழுதப்பட்டு, எழுதியவா் பெயா், முகவரி, கைப்பேசி எண்ணுடன் இம் மாதம் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்னதாக போட்டி நடைபெறும் இடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த முதல் 3 மாணவா்-மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து பேரணி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.