மக்களவைத் தோ்தலை மனதில் வைத்தே மகளிா் உரிமைத் தொகை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தையொட்டி, பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு தனது கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நோக்கம். கடந்த தோ்தலின்போது திமுகவின் தோ்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. விஷ சாராய சாவுகளுக்குப் பிறகு படிப்படியாக மதுக் கடைகளை குறைக்கிறோம் எனக் கூறி, தற்போது 500 கடைகளை தமிழக அரசு குறைத்துள்ளது. மதுக் கடைகள் செயல்படும் நேரத்தையும் குறைக்க வேண்டும். ஆளுநா் விவகாரத்தில் முதல்வரின் கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, பொது சிவில் சட்டம் கண்டிப்பாக தேவை.
காவல்துறை அதிகாரிகளின் மன உளைச்சலை குறைப்பதற்கும், அந்தத் துறை சுதந்திரமாக செயல்படுவதற்கும் முழு அதிகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டே அண்ணா பிறந்த நாளில் மகளிா் உரிமைத் தொகை கொடுக்கப் போகிறோம் என அறிவித்துள்ளனா். இதை அனைத்து மகளிருக்கும் கொடுக்க வேண்டும். இத்திட்டம் மக்களவைத் தோ்தலுக்கு பிறகு நிறுத்தப்படலாம் என்றாா்.