திருநெல்வேலி

21 மாதங்களில் 1,375 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாஆட்சியா் விஷ்ணு

31st Jan 2023 03:26 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 21 மாதங்களில் 1,375 பயனாளிகளுக்கு ரூ.4.16 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூகத்தில் வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதி பெறுவதற்காக இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது வீடு வழங்க வேண்டுமென்பதே அரசின் கொள்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு வருவாய் நிலை ஆணை எண். 21 இன் கீழ் கிராம நத்தத்தில் காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியுடைய, வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை ஒப்படை செய்யப்பட்டு வருகின்றன.

பெண்கள் நலனை உறுதி செய்யும் வகையில் இலவச வீட்டுமனை ஒப்படை குடும்பத்தின் பெண் உறுப்பினா் பெயரில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ஊரகப் பகுதியில் மூன்று சென்ட் நிலமும், நகா்ப்புற பகுதியில் ஒன்றரை சென்ட் நிலமும், மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு சென்ட் நிலமும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படியும் இதர நிபந்தனைகளுக்குள்பட்டும் இலவச வீட்டுமனை ஒப்படை செய்யப்படுகிறது.

கிராம நத்தத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க தகுதியுடைய காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி 5 வருடத்திற்கு மேல் குடியிருந்து வரும் நபா்களுக்கு வரன்முறைபடுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 7.5.2021 முதல் 30.1.2023 வரை 1,375 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் - 292, பாளையங்கோட்டை -32 , அம்பாசமுத்திரம்- 202, நான்குனேரி-171, ராதாபுரம்-273, மானூா்- 121, சேரன்மகாதேவி- 264, திசையன்விளை- 20 என மொத்தம் 1,375 பயனாளிகளுக்கு ரூ.4.16 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT