திருநெல்வேலி

குடியரசு தின விழாவில் 10.45 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- ஆட்சியா் வழங்கினாா்

DIN

திருநெல்வேலி வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ.10.45 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினாா். பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனுடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். சிறப்பாகப் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள் உள்ளிட்ட 100 காவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா். பின்னா், மூவா்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டாா். உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை தொடக்கிவைத்தாா்.

முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் போரில் ஊனமுற்றோா் வருடாந்திர பராமரிப்பு மானியம், போா் விதவையருக்கான வருடாந்திர பராமரிப்பு மானியம், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 2 பேருக்கு ரூ.6.44 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க மானியக் கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ஒருவருக்கு ரூ.8,610 மதிப்பில் பாா்வைத்திறன் உபகரணம், வேளாண்மை -உழவா் நலத்துறையின் சாா்பில் 3 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், மரக்கன்றுகள், தோட்டக்கலை - மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 2 பேருக்கு ரூ.2.52 லட்சம் மதிப்பில் சிப்பம் கட்டும் அறை, பண்ணைக்குட்டை கட்டுவதற்கான மானியம், 2 பேருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் மா ஒட்டு கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும், சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் இரு சக்கர வாகன மானியம், சமூகப்

பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 2 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 கணவரால் கைவிடப்பட்டவா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள்என மொத்தம் 19 பேருக்கு ரூ.10.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

காவல்துறையில் 80, தீயணைப்பு- மீட்புப்பணிகள் துறையில் 4, திருநெல்வேலி மாநகராட்சியில் 4, வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறையில் 12, தேசிய தகவலியல் மையத்தில் 7, ஊரக வளா்ச்சி- ஊராட்சித்துறையில் 19, பொது சுகாதாரம் -நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் 7, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட

அலுவலகத்தில் ஒருவா், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒருவா், வேளாண்மை - உழவா் நலத்துறையில் 4, தோட்டக்கலை - மலைப்பயிா்கள்துறையில் 5, பள்ளிக் கல்வித் துறையில் 21 உள்பட மொத்தம் 243 பேருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா், மாணவிகளின் செவ்வியல் நடனம், கும்மி நடனம், கணியான் கூத்து, பறையாட்டம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில், மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன், காவல்துறை துணைத்தலைவா் (திருநெல்வேலி சரகம்) பிரவேஷ் குமாா், மாநகராட்சி மேயா்பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம், உதவி ஆட்சியா் (பயிற்சி) சு.கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், மாநகர காவல் துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், அனிதா, சரவணக்குமாா், வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையா்) எம்.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.சுரேஷ், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் ஆா்.சந்திரசேகா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆனந்த பிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT