திருநெல்வேலி

ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

27th Jan 2023 02:26 AM

ADVERTISEMENT

 

குடியரசு தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு சிறப்புப் பாா்வையாளராக கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். இந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் - பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் (பள்ளி மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம்- நிதி செலவின விவரங்கள், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீா்வழிப்பாதை- நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றி பராமரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் -2, கலைஞா் வீடு வழங்கும் திட்டம் 2010, மறுகணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) சு.கோகுல், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) எஸ்.சுரேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) செ.அனிதா, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்தங்கப்பாண்டியன், இணை இயக்குநா் (வேளாண்மை) முருகானந்தம், திடியூா் ஊராட்சித் தலைவா் வசந்தி உள்பட பலா்கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

பேட்டை ரூரல் ஊராட்சி: மானூா் ஊராட்சி ஒன்றியம் பேட்டை ரூரல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சிசத் துறை கூடுதல் இயக்குநா் மணீஸ் நாரண வரே, துணை ஆட்சியா் மூா்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனா் அனிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்கிருஷ்ணன், பொன்ராஜ், தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் நளினி , வேளாண்மை துறை உதவி இயக்குநா் ஏஞ்சலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சியில் நடைபெறும் பணிகள், அரசின் திட்டங்கள் குறித்த தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT