வள்ளியூா் அருகேயுள்ள வடலிவிளையில் ஊா் மக்கள் சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதில், 129 கிலோ எடை இளவட்டக்கல் தூக்கும் போட்டியில், செல்லப்பாண்டி முதல் பரிசும், அருண் வெங்கடேஷ் 2-ம் பரிசு பெற்றாா். 88 கிலோ எடை இளவட்டக் கல் தூக்குதலில் முத்தப்பாண்டி முதல் பரிசையும், பிரதீஷ்வரன் 2ஆம் பரிசையும் வென்றனா்.
பெண்கள் 50 கிலோ எடை உரல் தூக்கும் போட்டியில் ராஜகுமாரி முதல் பரிசை பெற்றாா். தங்கபுஷ்பம் 2ஆம் பரிசை பெற்றாா். உரலைத் தூக்கி ஒரு கையில் நிறுத்தும் போட்டியில் அஜய் முதல் பரிசையும் பாலகிருஷ்ணன் 2ஆம் பரிசையும் வென்றனா்.
இவ்விழாவில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்று வாழ்த்திப் பேசி, உரல் தூக்குதலில் முதலிடம் பெற்ற ராஜகுமாரிக்கு சிறப்புப் பரிசு வழங்கினாா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பணகுடி பேரூராட்சி துணைத் தலைவா் புஷ்பராஜ், ஆபிரகாம், வள்ளியூா் அன்பரசு, ஜெயராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.