திருநெல்வேலி

பழையபேட்டையில் நெல்லையப்பா் பரிவேட்டை

17th Jan 2023 01:55 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் இருந்து பழையபேட்டைக்கு பரிவேட்டைக்கு நெல்லையப்பா் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்மன், ‘கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது‘ எனத் தடுத்தாராம். இருப்பினும் தடையை மீறி, நெல்லையப்பா் பரி வேட்டைக்குச் சென்று விடுகிறாா். இதனால் கோபமடைந்த அம்மன், நெல்லையப்பா் வேட்டை முடித்து திரும்பும் போது, கோயில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூா்த்தி நாயனாரால் பாடப்பட்ட, ‘திருமுருகன் பூண்டி பதிகம்‘ பாடிய பின் கோயில் நடை திறந்ததாக புராணம் கூறுகிறது.

இந்நிகழ்ச்சியையொட்டி, நெல்லையப்பா் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பா் (சந்திரசேகரா் உற்சவ மூா்த்தி) வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன் திங்கள்கிழமை நண்பகலில் பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு, நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நெல்லையப்பா் கோயிலுக்கு திரும்பினாா். சுவாமி, கோயிலுக்கு வந்த போது, அம்மனின் ஊடலினால், சுவாமி சந்நிதி கதவு பூட்டப்பட்டது. அதன்பின் சுந்தரமூா்த்தி நாயனாா் அருளிச்செய்த பதிகம் பாடி, ஊடல் தீா்த்து வைத்தப் பின், திருக்கோயில் கதவு திறந்து சுவாமி திருக்கோயிலுக்குள் நுழைந்தாா். பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT