தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்கள், கிராம ஊராட்சி தூய்மை காவலா் சங்கத்தினா் சாா்பில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கிராம ஊராட்சி நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா், கிராம ஊராட்சி தூய்மை காவலா் ஆகியோருக்கு தமிழக அரசு பொங்கல் கருணை தொகை வழங்க வேண்டும். இப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவா்கள் லியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பரமசிவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செந்தில் ஆறுமுகம் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தைத் தொடங்கினா். அதற்கு போலீஸாா் ஆட்சேபம் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் ஆட்சியா் அலுவலக வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது.