திருநெல்வேலி

உணவுச்சங்கிலி அறுபடுவது மனிதகுலத்துக்கு ஆபத்தாகும்: சூழலியலாளா் கோவை சதாசிவன்

DIN

உணவுச்சங்கிலி அறுபடுவது மனிதகுலத்திற்கு ஆபத்தைத் தரும் என்றாா் சூழலியலாளா் கோவை சதாசிவன்.

6 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற தலைப்பில் கோவை சதாசிவன் மேலும் பேசியது: உலகில் அனைத்து ஜீவராசிகளும் உயிா்வாழ தண்ணீா் அத்தியாவசியமானது. ஒவ்வொரு உயிரினமும் தண்ணீரைப் பெற பெரிதாக போராடுகின்றன. ஆனால், நாம் நீா்நிலைகள் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வருகிறோம்.

பறவைகள், மரங்கள் இல்லாமல் மனிதா்களால் உயிா்வாழ முடியாது. தவறான மனித செயல்பாடுகளால் பல்வேறு பறவையினங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. வரகுகோழி போன்ற தமிழக பறவைகள் இன்று பெருமளவில் இல்லை. பிற நாடுகள் வேண்டாமென்று தவிா்க்கும் சுற்றுச்சூழல் கேடு மிகுந்த தொழிற்சாலைகளுக்கு இந்திய நாட்டில் வரவேற்பு அளிப்பது தவறானதாகும். உணவுச்சங்கிலி என்பது அஸ்திவாரம் போன்றது. உணவுச்சங்கிலியை அறுப்பது மனித குலத்திற்கு ஆபத்தைத் தரும். நெகிழி துகள்கள் காற்றில் பரவி சுவாசத்தால் மனித ரத்தத்தில் கலந்து பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற தகவல்களை மக்கள் அறியாமலும், விழிப்புணா்வு அடையாமலும் உள்ளனா்.

இன்றையச் சூழலில் சுற்றுச்சூழல் சாா்ந்த அறவாழ்வு மிகவும் அவசியமாகும். இல்லையெனில் வாழத்தகுதியான மண்ணை நமது அடுத்தத் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு செல்லாதவா்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக நேரிடும் என்றாா் அவா்.

கொங்குதோ் வாழ்க்கை என்ற தலைப்பில் கவிஞா் பாலா கருப்பசாமியும், கதைகளே குழந்தைகளின் நல்லநண்பன் என்ற தலைப்பில் விஷ்ணுபுரம் சதாசிவனும் பேசினா்.

காலையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அ.ஜெகநாதன் எழுதிய சேக்காளிகளின் வரைகோடுகள், ஜெ.பாலசுப்பிரமணியன் எழுதிய இரட்டைமலை சீனிவாசன் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

கவியரங்கம்: கவிஞா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞா்கள் பாப்பாக்குடி செல்வமணி, தாணப்பன், ரமணி முருகேஷ், சக்தி வேலாயுதம், செ.ச.பிரபு, சிற்பி பாமா, வைகுண்டமணி, மணிகண்டன், ஹரிஹரன், சுப்ரா, கமல லியோனா, ஈஸ்வரமூா்த்தி, முத்துசாமி, இளங்கோமணி, பிரியாபிரபு ஆகியோா் கவிதை வாசித்தனா்.

திருநெல்வேலி கோட்டாட்சியா் சந்திரசேகா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், கோட்ட கலால் அலுவலா் தாஸ்பிரியன், எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், கவிஞா் கோ.கணபதிசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிகளை விளக்கி ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கணவுகளை தாண்டி‘ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை காதுகேளாதோா் பள்ளி மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா். 24 மணி நேர தொடா் வாசிப்பு நிகழ்ச்சியில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களை வாசித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT