மின்சாரம் தாக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலை, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மொத்தம் 650 மனுக்களை மக்கள் அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்குச் சென்று அவா்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
மின்சாரம் தாக்கி இறந்ததற்காக மேல வீரராகவபுரம், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மலையாண்டி மகன் கொம்மையா (28) என்பவரின் குடும்பத்துக்கு, முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவருடைய தாயாா் சகுந்தலாவிடம் ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் உஷா, அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.