திருநெல்வேலி

ஊதிய நிலுவை: ஆரம்பப் பள்ளிஆசிரியா் கூட்டணி போராட்ட அறிவிப்பு

9th Feb 2023 02:49 AM

ADVERTISEMENT

நிலுவை ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன் வெள்ளிக்கிழமை (பிப்.10) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அதன் திருநெல்வேலி மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளையின் மையப் பொறுப்பாளா்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக மூன்றாவது வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நான்குனேரி வட்டார கல்வி அலுவலகத்தில் 53 ஆசிரியா்களுக்கும், ராதாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் 83 ஆசிரியா்களுக்கும் டிசம்பா் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதேபோல், ஜனவரி மாதத்திற்கான மாத ஊதியம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு தற்போது வரை பெற்று வழங்கப்படவில்லை. இதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசும் கல்வித்துறையும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலருக்கு மின்னஞ்சலிலும், பதிவு அஞ்சலிலும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், திருநெல்வேலி, வள்ளியூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் ஆகியோருக்கு மின்னஞ்சலிலும், பதிவு அஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன் சுவரொட்டி ஒட்டுவது, வெள்ளிக்கிழமை (பிப்.10) மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டார கல்வி அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT