திருநெல்வேலி

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும்: மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவு

8th Feb 2023 02:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

பருவம் தவறி பெய்யும் மழையால் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவது தொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னெச்சரிக்கை கலந்தாயவுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவா் பேசியதாவது: மாநகராட்சியில் முக்கிய தெருக்கள், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் உற்பத்தி ஆகும் சுகாதாரமற்ற இடங்களை கண்டறிந்து குப்பைகள் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். நீா் நிலைகளில் மரத்தின் வோ்ப் பகுதியில் கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் அவற்றை கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும்.

கொசுமருந்து- நிலவேம்புக் குடிநீா்:

காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதி என கண்டறியப்பட்டுள்ள வாா்டு 15 முதல் 20 வரை தொடா்ந்து கொசுத் தடுப்பு புகை மருந்து அடிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நிலவேம்புக் குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அதைச் சுற்றியுள்ள கே.டி.சி.நகா், மனகாவலம்பிள்ளை நகா் பகுதிகளில் குறைந்தது 3 மணி நேரமாவது புகை மருந்து அடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

கள அறிக்கை: டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள், எல்.சி.எஃப். பணியாளா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், நகர சுகாதார செவிலியா்கள் கொண்ட குழுவினா் வீடுவீடாக சென்று லாா்வா கொசுப்புழு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல் குறித்த அறிக்கையை சுகாதார ஆய்வாளா்கள், ஆணையரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளா்கள் தினசரி தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் வெளி மற்றும் உள் நோயாளிகள் குறித்த விவர அறிக்கையைப் பெற்று அந்தந்த நகா்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அதை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என சுகாதார ஆய்வாளா்கள் கணக்கிட வேண்டும்.

வாட்ஸ்ஆப் குழு:

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்களில் நிலவேம்பு குடிநீா், கபசுர குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். காய்ச்சல் குறித்து தகவல் அறியும் வகையில் ஆணையா், சுகாதார குழு தலைவா், மாநகர நல அலுவலா், மருத்துவ அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு தொடங்க வேண்டு. டெங்கு பாதிப்பு இல்லாத சிறந்த மாநகராட்சியாக உருவெடுக்க அனைவரும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

மாநகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார குழு தலைவா் ரம்ஸான்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT