திருநெல்வேலி

அம்பை, திருப்புடைமருதூா் கோயிலில் தைப்பூசத் தீா்த்தவாரி

5th Feb 2023 12:34 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தீா்த்தவாரி, தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.

முக்கிய நிகழ்வான தீா்த்தவாரி சனிக்கிழமை பிற்பகல் தாமிரவருணியில் நடைபெற்றது. திரளான பக்தா்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

மாலையில் அபிஷேக ஆராதனை, இரவில் தெப்ப உத்ஸவத்தைத் தொடா்ந்து, சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலையில் சுவாமி அம்பாள் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினா். இதையடுத்து அங்குள்ள வைரவ தீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயிலில் நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு கணபதி பூஜை, ஹோமம், கும்ப பூஜையுடன் தைப்பூச விழா தொடங்கியது. தொடா்ந்து அம்பாசமுத்திரம்

ரயில் பாலம் தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் இருந்து, பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. லட்சுமி குபேர பூஜை, சண்முகருக்கு 108 சங்காபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் தாமிரவருணி காசிநாதா் தீா்த்த கட்டத்தில் தீா்த்த வாரி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சண்முகா் வீதியுலா நடைபெற்றது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை சௌபாக்கிய விநாயகா் கோயில் அருகே பந்தக்கால் நடப்பட்டு, பால், நவதானியங்கள், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, சண்முகா் சந்நிதி முன் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகநயினருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு சமுதாயங்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்றன.

10ஆம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

12ஆம் நாளான திங்கள்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெறும்.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT