திருநெல்வேலி

பண்பொழி, பணகுடி, வடக்கு அரியநாயகிபுரம், செங்கோட்டை கோயில்களில் தைப்பூசத் தேரோட்டம்

4th Feb 2023 06:35 AM

ADVERTISEMENT

செங்கோட்டை, பண்பொழி, வடக்கு அரியநாயகிபுரம், பணகுடி கோயில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் ஸ்ரீ நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் தைப் பூசத்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, பூஜைகள் நடைபெற்று வந்தன. இரவு சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்கள் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளியதும் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் மு.அப்பாவு வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். சனிக்கிழமை (பிப்.4) இரவு 8 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு அரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், இரவில் சப்தா வா்ணம், புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு சனிக்கிழமை சுவாமி அம்பாளுக்கு வைரவ தீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை குமரன் தேரில் எழுந்தருளியதை அடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 10 ஆம் நாள் தீா்த்தவாரியும், 11ஆம் நாள் முருகன், கீழ் கோயிலிருந்து மலைக் கோயிலுக்கு எழுந்தருளுதலும் நடைபெறும்.

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ தா்மஸம்வா்த்தினி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

செங்கோட்டையை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். சனிக்கிழமை (பிப். 4) சுவாமி- அம்பாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தேரோட்ட விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT