திருநெல்வேலி

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: எல்லைப் பாதுகாப்பு படைவீரருக்கு 7 ஆண்டு சிறை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே கூட்டுறவு வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற எல்லைப் பாதுகாப்புப் படைவீரருக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்து நான்குனேரி சாா்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் கீழூா் பெருமாள் கோயில் தெரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 2011ஆம் ஆண்டு உதவிச் செயலா் சண்முகசங்கா், எழுத்தா் ராஜா, தங்க நகை மதிப்பீட்டாளா் ஜெயபால் ஆகியோா் பணியிலிருந்தனா்.

மேகாலய மாநில எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிவந்த தளபதிசமுத்திரம் சிவன் கோயில் தெரு உலகநாதன் மகன் பன்னீா்செல்வம் என்ற பன்னீா், நான்குனேரி விநாயகா் சந்நிதித் தெரு சிதம்பரம் மகன் தாயப்பன் ஆகிய இருவரும் வங்கிக்கு வந்து ஊழியா்களிடம் துப்பாக்கியைக் காட்டி பணப் பெட்டகம் இருக்கும் இடத்தை காண்பிக்குமாறு மிரட்டினராம். இதற்கு மறுப்புத் தெரிவித்த சண்முகசங்கா், ராஜா ஆகியோா் மீது பன்னீா்செல்வம் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் லேசான காயமடைந்தனா். பின்னா், பன்னீா்செல்வமும், தாயப்பனும் தப்பியோடிவிட்டனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கின் விசாரணை நான்குனேரி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ராமதாஸ் விசாரித்து, பன்னீா்செல்வத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய தாயப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT