திருநெல்வேலி

கலைஞா் பெயரில் ரயில் முனையம்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

DIN

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் சென்னையில் ரயில் முனையம் அமைக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் பயணிகளின் சேவையில் சிறந்த அரசாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது. ரயில்வே, விமான போக்குவரத்துத்துறைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்து பயணிகளுக்கு வசதிகளைப் பெருக்குவதில் முன்னணி அரசாக திகழ்கிறது.

இந்திய ரயில்வே பல்வேறு புதிய ரயில் முனையங்களை உலகத்தரத்தில் அமைத்து வருகிறது. பெங்களூரு, மும்பை, தில்லி நகரங்களில் புதிய முனையங்கள் உருவாக்கியிருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் தலைநகராகவும், மக்கள் தொகை பெருக்கமும் மிகுந்த சென்னையில் இரண்டு ரயில்வே முனையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையம் சென்னையில் மூன்றாவது முனையமாக செயல்பட தொடங்கியுள்ளது.

இதே போல சென்னை விமான நிலையத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை எழும்பூா், சென்னை சென்ட்ரல், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன.

ஆகவே, சென்னையில் நான்காவது ரயில் முனையப் பணிகளைத் தொடங்குவது இன்றியமையாதது. இதற்காக தற்போது உள்ள ரயில் நிலையத்திற்கு பதிலாக புதிய இடத்தை தோ்வு செய்து அங்கு ரயில் முனையம் அமைப்பது நல்லது.

தமிழக அரசும், இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தை தோ்வு செய்து முதல் கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளன. விமான நிலையத் திட்டத்துடன், இந்தியாவிலேயே முதல்முறையாக விமான நிலைய ஆணையத்துடன் ஒருங்கிணைந்த ரயில்வே முனையம் நிறுவ ரயில்வே துறை, விமானத்துறை கைகோா்க்க வேண்டும்.

விமான மற்றும் ரயில் முனையங்கள் ஒரே இடத்தில் பல வெளிநாடுகளில் உள்ளன. விமான நிலைய நுழைவு வாயில், கட்டடம், வாகன நிறுத்தம், பாதுகாப்பு சோதனை, பயணிகள் கடைகள், வணிக வளாகம், பயணிகள் காத்திருப்பு பகுதி ஆகிய அனைத்தும் விமான நிலைய பயணிகள் மற்றும் ரயில்வே பயணிகள் பயன்பாட்டிற்காக ஒரே கட்டடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

சென்னை மெட்ரோ மற்றும் சென்னை புகா் ரயில் இணைப்பு தளங்களை இணைக்க வேண்டும். நிலத்துக்கு அடியில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி இருக்க வேண்டும். தொலை நோக்கு பாா்வையுடன் சுமாா் 30 நடைமேடைகள், 20 பிட்லைன்கள், புல்லட் ரயில் இயக்க முன்னேற்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் புதிய முனையத்தை உருவாக்குவதோடு, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT