திருநெல்வேலி

நெல்லை மாநகரில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

25th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகரில் தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை திடீா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில் 55 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் காலை, மாலை வேளைகளில் 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள யூனிட் அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையைப் பதிவு செய்து வந்தனா். இந்நிலையில் அந்தந்த வாா்டுகளிலேயே வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது. மேலும், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்துக்கு சாா்ஜ் போடுவதற்கு மண்டல அலுவலகம் வரக் கூடாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். இதையடுத்து போராட்டக் குழுவினருடன் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பிற்பகல் 2 மணி வரை காத்திருந்த தூய்மைப் பணியாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடு திரும்பினா்.

இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலா் மோகன் கூறுகையில், ‘ போராட்டத்தில் ஈடுபட்ட எங்களிடம் அதிகாரிகள் வந்து பேசவில்லை. வாா்டு உறுப்பினா்களை வைத்துப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்கள். எங்களின் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். மாநகராட்சி ஆணையா், திங்கள்கிழமை எங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளாா். அதில் உடன்பாடு ஏற்பட்டால், தூய்மைப் பணியாளா்கள் பணிக்குச் செல்வாா்கள். இல்லையெனில் போராட்டம் தொடரும்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT