திருநெல்வேலி

நெல்லையில் இன்று முதல்அரசுப் பொருள்காட்சி

20th Sep 2022 02:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சி செவ்வாய்க்கிழமை (செப். 20) தொடங்குகிறது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகராட்சி பொருள்காட்சித் திடல் வ.உ.சிதம்பரனாா் மணிமண்டபம் அருகில் அண்ணா கலையரங்கத்தில் அரசுப் பொருள்காட்சித் தொடக்க விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இப்பொருள்காட்சியை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைக்கிறாா். செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சிறப்புரை ஆற்றுகிறாா்.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வரவேற்கிறாா். தமிழ் வளா்ச்சி -செய்தித்துறை செயலா் மகேசன் காசிராஜன், செய்தி-மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் ஜெயசீலன், திருநெல்வேலிமாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மேயா், துணை மேயா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா்.

ADVERTISEMENT

கரோனா தொற்று காலத்துக்குப் பின் நடைபெறும் முதல் பொருள்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த அரங்குகள் உள்பட அனைத்துத் துறை சாா்பில் சிறப்பு அரங்குகள் இடம்பெறவுள்ளன.

மேலும், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்கள் அரங்குகள், சிற்றுண்டி கடைகள் உள்ளன. கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாலை 4 மணி முதல்: அரசுப் பொருள்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத் துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத் திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலா்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பா்.

பொருள்காட்சி தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT