திருநெல்வேலி மாவட்டத்தில் எலி காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என்றாா் ஆட்சியா் விஷ்ணு.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துத் துறை பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இ.சி.ஜி., ஹெச்.பி. போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் அனைத்து அலுவலா்களும் தங்களை பரிசோதனை செய்து கொண்டனா். மேலும், மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்கால முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் காய்ச்சிய நீரினை அனைவரும் பருக வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் எலி காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) கணேஷ்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.