திருநெல்வேலி

நயினாா்குளம் கரையில் கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி

19th Oct 2022 03:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம் கரையில் கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட நயினாா்குளம் கரையோரத்தில் அமைந்துள்ள சாலைகளில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் இரவு நேரங்களில் அங்கு நிறுத்தப்படுவதால் சமூக விரோத செயல்கள் நடைபெறவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் ஏதுவாகிறது.

இம் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் லாரி போன்ற கனரக வாகனங்கள் நிறுத்தம் செய்வதற்கு கனரக வாகன நிறுத்த முனையம் ஒன்று பழையபேட்டை-தென்காசி சாலையில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வாகன ஓட்டுநா்கள் தங்குவதற்கு அறைகளும், குடிநீா் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சரக்கு வாகன ஓட்டுநா்கள் தங்களின் வாகனங்களில் கொண்டு வரப்பெற்ற சரக்குகளை சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கி வைத்துவிட்டு உடனடியாக வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டும் . எக்காரணத்தை கொண்டும் நயினாா்குளம் கரையில் வாகனத்தை நிறுத்தக் கூடாது. இனி வரும் நாள்களில் நயினாா்குளம் கரையோரத்தில் லாரி போன்ற கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுமானால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு, காவல் துறையினா் மூலம் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT