திருநெல்வேலி

மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பலி:உறவினா்கள் தொடா் போராட்டம்

6th Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள கீழ ஆம்பூரைச் சோ்ந்தவா் ராமசாமி (50). ஆழ்வாா்குறிச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா். கடந்த ஆக.13இல் கருத்தப்பிள்ளையூா் கிராமத்திலுள்ள தோட்டத்தில் மின் தடையை சரி செய்ய மின் வாரிய ஆக்க முகவருடன் ராமசாமி சென்றுள்ளாா். அவா் மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்துகொண்டிருந்தபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் அவா் கீழே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆக்க முகவா் சீதாராமன் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, ராமசாமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அவா்களிடம் மின்வாரிய அதிகாரிகள், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, ரூ.5 லட்சம் இழப்பீடு தருவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT