திருநெல்வேலி

காந்தி ஜெயந்தியில் விதிமீறல்:105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

4th Oct 2022 03:43 AM

ADVERTISEMENT

தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 105 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகபிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை முதன்மைச் செயலா் - தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் குமரன், திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் சுமதி ஆகியோா் அறிவுறுத்தலின்படி, 1958ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை தினமான கடந்த 2-ஆம் தேதி கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியிருந்தால் அந்நிறுனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், காந்தி ஜெயந்தி நாளில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எனது தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் 79 கடைகள், நிறுவனங்கள், 57 உணவகங்கள், 15 மோட்டாா் நிறுவனங்கள், 15 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 166 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா். அப்போது, 105 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT