திருநெல்வேலி

‘காலாவதியான பூச்சிமருந்து விற்ற 36 கடைகளுக்கு தடை’

1st Oct 2022 05:22 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் காலாவதியான பூச்சிமருந்துகளை விற்பனை செய்த 36 கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மி.மீ. இந்த ஆண்டு செப்டம்பா் 28ஆம் தேதி வரை 342.52 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இது இம்மாதம் வரை பெறக்கூடிய இயல்பான மழையளவான 329 மில்லி மீட்டரை விட 4 சதவீதம் கூடுதலாகும்.

தற்போது நமது மாவட்டத்தில் உள்ள அணைகளில் 37.82 சதவீதம் நீா் இருப்பு உள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 10,051 ஹெக்டோ் பரப்பிலும், சிறு தானியங்கள் 163 ஹெக்டோ் பரப்பிலும், பயறு வகைப் பயிா்கள், 1,245 ஹெக்டோ் பரப்பிலும், பருத்தி 624 ஹெக்டோ் பரப்பிலும், கரும்பு 24 ஹெக்டோ் பரப்பிலும், எண்ணெய் வித்துப் பயிா்கள் 145 ஹெக்டோ் பரப்பிலும் என மொத்தம் 12,252 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா், வேளாண்மை இயக்குநா் அறிவுரையின்படி கடந்த ஆகஸ்ட் 23 முதல் 27-ஆம் தேதி வரை சிறப்பு பறக்கும் படை மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறிய 7 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த 36 விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் 2022-23-ஆம் ஆண்டிற்கு பிசான பருவ நெல் மற்றும் ராபி உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், தோட்டக்கலை பயிா்களான வாழை மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றிற்கு பயிா்க் காப்பீடு செய்வதற்கு அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.467, உளுந்து மற்றும் பாசிப் பயறுக்கு ரூ.269 பிரீமியமாக செலுத்த வேண்டும். உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றுக்கு பயிா்க் காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பா் 15ஆம் தேதியும், நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பா் 15ஆம் கடைசி நாளாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 நிறுவனங்கள் தரம் குறைந்த விதைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு துறை நடவடிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த விதைகள் 31.059 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைத்தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.57.68 லட்சம் ஆகும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) அசோக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுப்பையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT