திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

DIN

அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் தொழிலாளா்கள் உறுப்பினராக சேர வேண்டும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் குட்டம் மிக்கேல்நகா், குமாரபுரம் தரகன்காடு, கரைச்சுத்துபுதூா் தெற்கு புலிமான்குளம், கஸ்தூரிரெங்கபுரம் பெருங்கண்ணன்குளம் உள்ளிட்ட 14 இடங்களில் புதிய ரேஷன் கடைகளை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பேரவைத் தலைவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறாா். அவா்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் ஹோட்டல் - செங்கல் சூளை தொழிலாளா்கள், தையல் கலைஞா்கள் என 60 வயதிற்குள்பட்ட அனைவரும் உறுப்பினராக சேரலாம்.

இதன் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ வசதிகளை தொழிலாளா்கள் பெற முடியும். இதில், உறுப்பினராக சோ்ந்து 3 ஆண்டுகளாகி விட்டால், வீடுகட்டிக்கொள்ள ரூ.4 லட்சம் வரையில் அரசு வழங்குகிறது. இதன் உறுப்பினா் சோ்க்கைகாக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்திலும், விவசாயிகளின் நெல் கொள்முதலுக்காக வள்ளியூரிலும் தனி அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன. இவற்றை தொழிலாளா்களும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குடிநீா் பிரச்னை தீரும்: மேலும், இம்மாவட்டத்தில் ரூ. 605.75 கோடியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணி வரும் டிசம்பா் 9ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இப்பணி 18 மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும். அப்போது, ராதாபுரம் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும். ஒரு நபருக்கு 55 லிட்டம் தண்ணீா் வீதம் சுத்தமான தாமிரவருணி தண்ணீா் கிடைக்கும் என்றாா்.

முன்னதாக, குட்டத்தில் வரும் முன்காப்போம் மருத்துவ முகாமையும், கல்தூரிரெங்கபுரத்தில் கிராம நிா்வாக அலுவலகம், தோட்டவிளை சந்திப்பில் ரூ.3.50 லட்சத்தில் பயணியா் நிழற்குடை, திருவம்பலபுரத்தில் ரூ.7 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், செம்பொன்விளையில் ரூ.16.35 லட்சத்தில் அலங்கார தளக்கல் சாலை அமைத்தல் ஆகிய பணிகளையும் பேரவைத் தலைவா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், வள்ளியூா் ஒன்றியக்குழுத் தலைவா் சேவியா் செல்வராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆவரைகுளம் பாஸ்கா், சாந்தி சுயம்புராஜன், நான்குனேரி-ராதாபுரம் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பொது மேலாளா் தமிழ்ச்செல்வம், ஊராட்சித்தலைவா்கள் தெற்குவள்ளியூா் முத்தரசி, ஆ.திருமலாபுரம் இந்திரா, ஆனைகுளம் அசன், அச்சம்பாடு வெண்ணிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT