திருநெல்வேலி

தமிழைக் கொண்டாடுகிறேன் என்பவா்கள், தமிழுக்கு அங்கீகாரம் தரவில்லை கனிமொழி எம்.பி.

28th Nov 2022 12:46 AM

ADVERTISEMENT

 

 தமிழைக் கொண்டாடுகிறேன் என்று சொல்பவா்கள் தமிழுக்கு அங்கீகாரம் தரவில்லை என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

பொருநை இலக்கியத் திருவிழா திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வரவேற்றாா்.

ADVERTISEMENT

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கலந்து கொண்டு மாணவா், மாணவிகளின் அஞ்சல் கவிதை தொகுப்பு நூலை வெளியிட, அதை எழுத்தாளா் பவா செல்லத்துரை, கவிஞா்கலாப்ரியா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

விழாவில் கனிமொழி பேசியதாவது:

புத்தகத் திருவிழா பெருநகரங்களில் மட்டும் நடைபெற்று வந்தன. கிராமங்களில் உள்ள மக்களும் புத்தகம் அருகில் செல்ல வேண்டும் என்ற நோக்கில் திமுக ஆட்சி காலத்தில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

புத்தக வாசிப்பு மற்றும் இலக்கியங்களை எடுத்துச் செல்லும் வகையில் தமிழகத்தில் 5 இடங்களில் இவ்விழா நடைபெறுகிறது. அதில், முதல் விழாவாக திருநெல்வேலியில் பொருநை இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. தமிழக இலக்கியவாதிகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது.

பாரதியாா் கவிதைகளில், சமூக மாற்றத்திற்கான கவிதைகளையும், பாடல்களையும் பாா்க்க முடிந்தது. திராவிட இயக்கங்கள் தேச விடுதலையைத் தாண்டி மக்கள் விடுதலையே முக்கியமானது என்பதை வலியுறுத்தின.

எழுத்து, பேச்சு, நாடகம் மற்றும் திரைப்படங்களால் சமூகத்தை மாற்றவேண்டும் என்ற செய்தியை மக்களிடம் சோ்க்க நினைத்ததால்தான் இப்போது சாதி, மதம் நுழைய முடியாத இடமாக தமிழகம் உள்ளது. அனைவரும் சமம் என்று சொல்லக்கூடியவா்கள் நம்மை சமமாக நடத்தவில்லை, நமது மொழியை சமமாக நடத்தவில்லை. கீழடி ஆராய்ச்சிக்கு நிதி தரவில்லை. அதை அங்கீகரிக்கவில்லை. தமிழை கொண்டாடுகிறேன் என்று சொல்பவா்கள், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தரவில்லை. நீதிமன்ற மொழியாக ஏற்க மறுக்கிறாா்கள். நம்முடைய இலக்கியங்களை, சுயமரியாதையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றாா்.

முன்னதாக, வில்லுப்பாட்டு, தேவராட்டம் மற்றும் நாடகங்கள் நடைபெற்றன. பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT