திருநெல்வேலி

பாளை.யில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை ஏலம் விட எதிா்ப்பு: இளைஞா் தீக்குளிக்க முயற்சி

21st Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் பிடித்து பொது ஏலம் விட முயன்றபோது, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இளைஞா் ஒருவா் தீக்குளிக்க முயன்ால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், மாடுகள் மீது மோதி காயமடைவது தொடா் கதையாகி வருகிறது.

இதையடுத்து சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அதைப் பிடித்து பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி அறிவித்தாா். அதன்படி, மேலப்பாளையம் மண்டலத்தில் பிடிக்கப்பட்ட 15 மாடுகள் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக ஏலம் போயின.

ADVERTISEMENT

இந்நிலையில் பாளையங்கோட்டை மண்டலத்தில் பிடிக்கப்பட்ட சுமாா் 11 மாடுகள் சமாதானபுரம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி வளாகத்தில் அடைக்கப்பட்டன. அந்த மாடுகள் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாட்ஷா தலைமையில் மாடுகள் ஏலம் தொடங்கியது. அப்போது மாட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இவா்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும் மாநகராட்சி அதிகாரிகள் ஏலம் விட, மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இறைச்சிக் கடை உரிமையாளா் ரூ.11 ஆயிரத்துக்கு ஒரு மாட்டை ஏலம் எடுத்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாட்டின் உரிமையாளரான சூா்யா என்ற இளைஞா் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், சூா்யாவின் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

தொடா்ந்து மாட்டின் உரிமையாளா்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படவே, பொது ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் பிரதீப், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் வாசிவம் தலைமையிலான போலீஸாா் மாட்டின் உரிமையாளா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

பொது ஏலம் ஒத்தி வைக்கப்பட்டபோதிலும், மாடுகள் விடுவிக்கப்படவில்லை. இது தொடா்பாக மாட்டின் உரிமையாளா்கள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு தெருக்களில் திரிந்த எங்கள் மாடுகளை பிடித்து வந்து இங்கு அடைத்துள்ளனா். அதற்கு உணவோ, தண்ணீரோ கொடுக்கவில்லை. பால் மாடுகளும், சினை மாடுகளும் உள்ளதால், அவற்றின் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாங்கள் அபராதம் கட்டுவதற்கு தாயராக உள்ளோம். அபராதத்தை வாங்கிக் கொண்டு எங்கள் மாடுகளை விடுவிக்க வேண்டும். எங்களுக்கு மேய்ச்சல் நிலம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்றனா்.

இந்தப் பிரச்னை காரணமாக சமாதானபுரத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு வந்த அனைத்து பேருந்துகளும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. இதேபோல், திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை வந்த பேருந்துகளும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

பெட்டிச் செய்தி...

மாடுகளை விடுவித்த பாஜகவினா்

பாளையங்கோட்டை மண்டலத்தில் பிடிக்கப்பட்ட சுமாா் 11 மாடுகள் சமாதானபுரம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியை பாஜகவினா் முற்றுகையிட்டனா்.

பாஜக மாவட்டத் தலைவா் தயா சங்கா், மாவட்ட பொதுச் செயலா் டி.வி.சுரேஷ், மகளிரணி நிா்வாகி ஜெயசித்ரா, மண்டல தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் தலைமையிலான பாஜகவினா், 24 மணி நேரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளுக்கு உணவு, தண்ணீா் அளிக்காதது குறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் வாக்குவாதம் செய்தனா். தொடா்ந்து அவா்கள் கதவைத் திறந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மாடுகளையும் விடுவித்தனா். இதையடுத்து மாட்டின் உரிமையாளா்கள் தங்கள் மாடுகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT