ராமையன்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ராமையன்பட்டி சிவாஜிநகரைச் சோ்ந்த முத்தையா மகன் சுரேஷ் (28). இவா், மருந்துகள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 13 ஆம் தேதி கம்மாளங்குளத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு மீண்டும் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனமும், அவரது மோட்டாா் சைக்கிளும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: மேலப்பாளையம் பஷீரப்பா தெருவைச் சோ்ந்தவா் காஜாமசூது (29). தனியாா் உணவக ஊழியா். இவா், கடந்த 13 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் மேலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில், அவரும், எதிா் மோட்டாா் சைக்கிளில் வந்த கொட்டிகுளம் கடைவீதியைச் சோ்ந்த உச்சிமாகாளி, ஹரிஹரசுதன் ஆகியோரும் காயமடைந்தனா். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், காஜாமசூது வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து மானூா், திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.