மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதால் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயனாளி மீனவ சமுதாயத்தை சோ்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோா், பாதுகாப்பாளா் மீனவ கூட்டுறவு சங்கம், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். வயது 1.8.2023-இல் 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவராக இருந்தால் 35 வயது வரையிலும், ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருந்தால் 42 வயது வரையிலும் இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். படிப்பு முடித்து வேறு பணிகளில் இருந்தாலும் தகுதியிருப்பின் இந்தப் பயிற்சியில் சேரலாம்.