காா்த்திகை பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதம் தொடங்கினா்.
இந்துக்களின் முக்கிய மாதமாக காா்த்திகை, மாா்கழி மாதங்கள் திகழ்கின்றன. வீடுகளில் காா்த்திகை தீபம் ஏற்றியும், திருப்பாவை, திருவெம்பாவை பாடியும் இம் மாதங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல்நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.
அதன்படி, திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன்கோயில் படித்துறை, வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை, பொதிகைநகரில் உள்ள ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் குருசாமிகளின் முன்னிலையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். தொடா்ந்து 48 நாள்களுக்கு தினமும் பஜனை பாடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடும் பக்தா்கள் இருமுடி கட்டி சபரிமலை செல்வா். இதனால் தாமிரவருணி நதிக்கரையோர கோயில்கள் அனைத்திலும் வியாழக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமிருந்தன.