திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் , தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கம் சாா்பில் தகவல் தொழில் நுட்பத்துறையின் மூலம் புதிய தீா்வுகளை உருவாக்கும் போட்டி (ஹேக்கத்தான் போட்டி) வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற போட்டியை ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்தாா். துணை ஆட்சியா் (பயிற்சி) எஸ். கோகுல் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களை சோ்ந்த பொறியியல் மாணவா்களுக்கு முதலில் தகவல் தொழில் நுட்பத்துறையின் புதிய போக்குகள், யோசனைகள், தந்திரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
பின்னா் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்களில் சுமாா் 150 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு சமூக நலன் மேம்பாடு தலைப்புகளில் மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. மாணவா்களுக்கு உதவுவதற்கும், சந்தேகங்களைத் தீா்ப்பதற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆலோசகா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆலோசனை வழங்கினா்.
போட்டியில் சிறப்பிடம் பெறும் தலைசிறந்த இரண்டு புத்தாக்கங்களை தோ்வு செய்து அவா்களுக்கு காசோலை, கூகுள் பெங்களூரு நிறுவனத்தில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேலும், சிறந்த ஐந்து அணிகளுக்கு திருநெல்வேலியில் நடைபெறவிருக்கும் டெக்ஸ்டாா்ஸ் ஸ்டாா்ட் அப் வீக்என்ட் என்ற பன்னாட்டுப் போட்டியில் நுழைவு கட்டணமின்றி பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.
போட்டி தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு வருவாய் அலுவலா் மா. சுகன்யா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப மைய இயக்குநா் ஆறுமுகநயினாா், நான் முதல்வன் திட்ட இணையதள வடிவமைப்பாளா் விக்னேஷ் அண்ணாமலை, செந்தில் குமாா், ஸ்டாா்ட்டப் டி என் மண்டல மேலாளா் ராகுல், வரதராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.