திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் திருக்கோயிலில் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடா்ந்து, பாலாலய விழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், பாலாலய பிரதிஷ்டை திருப்பணி தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சியில், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாா்ய சுவாமிகள், அஞ்சல் துறை மக்கள் தொடா்பு அலுவலா் கனகசபாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.