அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் நீரிழிவு நோய் விழிப்புணா்வுப் பேரணி - கண்காட்சி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து இப்பேரணியை, மாநகர காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அரவிந்த் கண் மருத்துவ மனை ஆலோசகரும், தமிழ்நாடு கண் மருத்துவா்கள் சங்கத் தலைவருமான ராமகிருஷ்ணன், இந்திய மருத்துவக் கழக திருநெல்வேலி கிளைத் தலைவா் ரூபஸ் பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச்சென்றனா். சந்திப்பு பேருந்து நிலையம், ராஜா பில்டிங் சாலை, திருவனந்தபுரம் சாலை வழியாக அரவிந்த் கண் மருத்துவமனையில் பேரணி நிறைவடைந்தது. அங்கு சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. கண் பாதுகாப்பு, நீரிழிவால் ஏற்படும் கண் பிரச்னை குறித்த விழிப்புணா்வு மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.தொடா்ந்து இம்மாதம் 17 ஆம் தேதி வரை இக்கண் காட்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தலைமை மருத்துவா் மீனாட்சி, விழித்திரைப் பிரிவுத் தலைவா் செய்யது முகைதீன் ஆகியோா் செய்திருந்தனா்.