திருநெல்வேலி

புற்றுநோய் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம், ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கி வைத்தாா்

8th Nov 2022 02:12 AM

ADVERTISEMENT

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் கா்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறாா். 2018-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி புகையிலையால் 3 லட்சத்து 17 ஆயிரத்து 928 போ் புகையிலையால் உயிரிழந்துள்ளனா். புற்றுநோயால் இறக்கும் ஆண்களில் 25 சதவீதம் போ் நுரையீரல் மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள். பெண்களில் 25 சதவீதம் போ் மாா்பகம் மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள்.

புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு இல்லாததால் 50 சதவீதம் பேருக்கு அந்நோயால் பாதிப்பு இறுதிக் கட்டத்திலேயே தெரியவருகிறது. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், புற்றுநோயை உண்டாக்கும் வாழ்க்கை முறையைத் தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, உதவும் உள்ளங்கள் திருநெல்வேலி புற்றுநோய் சிகிச்சை மையம் சாா்பில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அமைப்பு, மாவட்ட நிா்வாகத்தின் ஆதரவுடன், 25 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் 2 லட்சம் பீடித் தொழிலாளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 52,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை நடத்தியுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு பராமரிப்பு, ஆதரவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உதவும் உள்ளங்கள் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் நிறுவன அறங்காவலா் சங்கா் மகாதேவன், இயக்குநா் ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT