திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கல்குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 55 கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

அடைமிதிப்பான்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள தனியாா் கல் குவாரியில் கடந்த 14 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 6 தொழிலாளா்கள் சிக்கினா். விபத்து நிகழ்ந்த 5 மணி நேரத்திலிருந்தே மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 3 போ் உயிருடன் மீட்கப்பட்டதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். மேலும், 3 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமையுடன் மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த கல்குவாரி செயல்பட தற்காலிக தடை ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது. அதேநிலை தொடரும். அங்கு நடந்துள்ள விதிமீறல்களுக்கான அபராதம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்படும். இதுதவிர இம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 55 கல்குவாரிகளிலும் ஆய்வு செய்ய மொத்தம் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இக் குழுக்களின் தலைவா்களாக உதவி ஆட்சியா் நிலையில் உள்ள அதிகாரி நியமிக்கப்படுவாா்.

பிற மாவட்டங்கள் மற்றும் இம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெறுவாா்கள். இவா்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா். கல்குவாரிகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆழமான பகுதிக்கு இறங்கும்போது அடுக்கடுக்கான பாதை வசதி, குறிப்பிட்ட கனமீட்டா் வரை மட்டுமே பாறைகளை வெட்டி எடுத்தல் உள்ளிட்ட அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பிரத்யேக கருவிகள் கொண்டும் சிறப்புக் குழு ஆய்வு செய்யும். ஆய்வறிக்கை கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை, தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா், வருவாய்த்துறையினருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பேட்டியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உடனிருந்தாா்.

ஆலோசனை:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமா்பிக்க திங்கள்கிழமை மாலையில், துணைஆட்சியா் தலைமையில் நிலஅளவையா், காவல்துறையினா், வருவாய்த் துறையினா், கனிமவளத்துறையினா் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினருடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டு, மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்து விரைவாக அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ்குமாா், கனிமவளத்துறை இணை இயக்குநா் குருசாமி, வருவாய் கோட்டாச்சியா்கள் சந்திரசேகா், சிந்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT