திருநெல்வேலி

நெல்லை கல்குவாரி உரிமையாளா்கள் சிறையிலடைப்பு

22nd May 2022 05:10 AM

ADVERTISEMENT

 

முன்னீா்பள்ளம் அருகே விபத்து நிகழ்ந்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரியின் உரிமையாளரும், அவரது மகனும் மங்களூரில் கைது செய்யப்பட்ட நிலையில் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட கல்குவாரி விபத்து தொடா்பாக குத்தகைதாரா் சங்கரநாராயணன், மேலாளா் ஜெபாஸ்டியன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். குவாரி உரிமையாளா் செல்வராஜ், அவரது மகன் குமாா் ஆகியோரை போலீஸாா் தேடி வந்த நிலையில் கா்நாடக மாநிலம், மங்களூரில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து திருநெல்வேலிக்கு அவா்களை சனிக்கிழமை அழைத்து வந்த போலீஸாா், முன்னீா்பள்ளம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், திருநெல்வேலி ஐந்தாவது நீதித்துறை நடுவா் மன்ற நீதித்துறை நடுவா் (பொ) திரிவேணி முன்னிலையில் இருவரையும் ஆஜா்படுத்தினா். இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வருமாறு நீதித்துறை நடுவா் கூறியதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னா், திருநெல்வேலி ஐந்தாவது நீதித்துறை நடுவா் மன்ற நீதித்துறை நடுவா் (பொ) திரிவேணி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதையடுத்து இருவரையும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT