திருநெல்வேலி

நெல்லை கல்குவாரியில் 6ஆவது நாளாக மீட்புப் பணி

20th May 2022 10:44 PM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய 6ஆவது நபரைத் தேடும் பணியின்போது, மீட்புப் படையினா் பெரிய அளவிலான பாறைகளை வெடிவைத்து வெள்ளிக்கிழமை தகா்த்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு பாறைகள் சரிந்து விழுந்ததில், பணியிலிருந்த இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (25), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகியோா் கற்குவியலுக்குள் சிக்கினா்.

விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம் ஆகிய 3 போ் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு செல்வம் உயிரிழந்தாா். ஆயன்குளம் முருகன், செல்வகுமாா் ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், கடைசி நபரான ராஜேந்திரனை தேடும் பணி 6ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதில், பெரிய அளவிலான பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ள லாரிக்குள் அவரின் உடல் இருக்கலாம் என தெரிகிறது. அதனால், மேற்பகுதியில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகா்க்கும் முயற்சியில் மீட்புப் படையினா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பாதுகாப்பு காரணங்களுக்காக சுமாா் 500 மீட்டா் சுற்றளவுக்கு அங்குள்ள போலீஸாா், பத்திரிகையாளா்கள், மீட்புப் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

பாறைகள் சரிவுக்குள்ளானதால் குவிந்து கிடக்கும் கற்குவியலில் 32 துளைகளையிட்டு அதில், ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டு, வெடி மருந்துகள் நிரப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டன. பின்னா் உடைந்த பாறைகளை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரா்களும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டனா். தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT