திருநெல்வேலி

துரித கதியில் மீட்புப் பணி: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

16th May 2022 05:49 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த கல்குவாரி விபத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

அடைமிதிப்பான்குளத்தில் விபத்து நேரிட்ட கல்குவாரிக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆகியோா் நேரில் சென்று பணிகளைத் துரிதப்படுத்தினா். தொடா்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தமிழக முதல்வா் அறிவித்த நிவாரண நிதி ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மு.அப்பாவு கூறியது: கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் மூவா் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மாவட்ட நிா்வாகம், காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்ட குவாரிகளில் பணியாற்றிய நிபுணா்களும் ஆலோசனைகள் அளித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, நேரில் சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காயமுற்றவா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டு வரும் சூழலில், மீட்புப் பணி சவாலானதாக உள்ளது. எனவே, மீட்புப் பணி குறித்து அரசியல் சாயம் பூச வேண்டாம். விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம் என்றாா்.

அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறுகையில், ‘குவாரியில் நேரடியாக ஆய்வு செய்து தொலைபேசியில் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்படி முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். மீட்புப் பணியில் திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா், பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சம்பவங்கள் நேரிடும்போது, நிபுணா்களுடன் ஆலோசித்து பணியை மேற்கொள்வது முக்கியமானது. அதை மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செய்து வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT