திருநெல்வேலி

பழமையான 131 கோயில் நந்தவனங்களில் 3,664 மரங்கள்: கணக்கெடுப்பில் தகவல்

12th May 2022 03:03 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 131 பழமையான கோயில்களின் நந்தவனங்களில் 3,664 மரங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக மணிமுத்தாறு-அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும், ஒருங்கிணைப்பாளருமான மு. மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள், தாமிரவருணி மற்றும் அதன் துணை நதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. பெரும்பான்மையான கோயில்களில் நந்தவனங்கள் உள்ளன. அவற்றில் சில கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.

மேலும், நந்தவனங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்கத் தேவையான வழிமுறைகளை வகுக்கும் பொருட்டு, மணிமுத்தாறு- அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து 100 தன்னாா்வலா்கள் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள 131 பழைமையான கோயில்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

வகைகள்: இப்பணியில் 97 சிற்றினங்களைச் சோ்ந்த சுமாா் 3,664 மரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 841 வேப்ப மரங்கள், 512 தென்னை, 307 வில்வம், 196 தேக்கு, 120 மா, 102 அரசு, 102 நீா் மருது மரங்கள் ஆகியவை பதிவாகி உள்ளன. இலுப்பை, புங்கன், நெல்லி, புளி, ஆல், நாவல் போன்ற மரங்கள் 50-க்கும் மேல் உள்ளன.

அதிகபட்சமாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 26 சிற்றினங்களைச் சாா்ந்த 318 மரங்களும், நெல்லையப்பா் கோயிலில் 30 சிற்றினங்களைச் சாா்ந்த 294 மரங்களும், திருப்புடைமருதூா் நாறும்பூநாத சுவாமி கோயிலில் 27 சிற்றினங்களைச் சாா்ந்த 290 மரங்களும், முக்கூடல் முத்து மாலையம்மன் கோயிலில் 24 சிற்றினங்களைச் சாா்ந்த 210 மரங்களும் பதிவாகி உள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்களும் இக்கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளன.

நெல்லையப்பா் கோயிலில் உலக்கைப் பாலை மரம் ஒன்று மட்டும் உள்ளது. இந்த மரம் மற்ற எந்தக் கோயில்களிலும் காணப்படவில்லை. இதுதவிர மூன்று கடம்ப மரங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. வள்ளியூா் மற்றும் ராதாபுரம் கோயில்களில் நூற்றாண்டுகளைக் கடந்த கடம்ப மரங்கள் உள்ளன. சுமாா் 50 சிற்றினங்களைச் சாா்ந்த மரங்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகி உள்ளன.

கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட 131 கோயில்களில் சுமாா் 7 கோயில்களில் மரங்கள் ஏதும் இல்லை. சுமாா் 50 கோயில்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மரங்கள் பதிவாகி உள்ளன. களக்காட்டிலுள்ள சத்தியவாகீஸ்வரா் கோயிலில் நந்தவனத்தில் சுமாா் 43 சிற்றினங்களைச் சாா்ந்த மரங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலனவை நம்முடைய இயல் மரங்கள். இதுபோன்ற நந்தவனங்களை மற்ற கோயில்களிலும் செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும். மக்களும் காட்டுயிா்களும் ஒத்திசைந்து வாழக்கூடிய பகுதியாக உள்ள திருப்புடைமருதூரில் நந்தவனங்களை உருவாக்குவதே நீண்ட காலத்துக்கும் மக்களு=ள்க்கும் பல்லுயிரினங்களுக்கும் பயனளிக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT