திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையம் திறப்பு

12th May 2022 02:48 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருந்தியல்-நச்சுயியல் துறையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையத்தை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் துணைவேந்தா் செல்வக்குமாா் திறந்து வைத்தாா். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.பழனிசாமி, சிகிச்சைத் துறை இயக்குநா் டி.சத்தியமூா்த்தி, கால்நடை மருந்தியல் - நச்சுயியல் துறையின் தலைவா் செந்தில் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தில்லியில் உள்ள விலங்குகள் மீதான பரிசோதனைகளின் கட்டுப்பாடு- மேற்பாா்வைக்கான குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள இம்மையத்தில், எலி, சுண்டெலி, முயல், கினிப்பன்றி போன்றவற்றுக்கு தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தனிமைப்படுத்துதல் அறை, உடற்கூராய்வு அறை, உணவு - படுக்கைப் பொருள்கள் சேமிப்பு அறை, சுத்தம் செய்யும் உபகரண அறைகள் ஆகியவை உள்ளன. ஆய்வக விலங்கின அமைப்பு விதிகளின்படிஅனைத்து அறைகளும் குளிரூட்டப்பட்டு, 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் அளிக்கப்படுவதோடு, சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த ஆய்வக விலங்கு ஆராய்ச்சி மையத்தை, மருத்துவ மாணவா்கள், சித்த மருத்துவ மாணவா்கள், விலங்கியல் மாணவா்கள், முதுநிலை மருந்தக மாணவா்கள், உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவா்கள் என அனைத்து ஆராய்ச்சி மாணவா்களும் இங்குள்ள விலங்கினங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா், கால்நடை மருந்தியல்- நச்சுயியல் துறைத் தலைவா் ஆகியோரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆராய்ச்சி மைய திறப்பு விழாவில், பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT