கடையம் ஊராட்சி ஒன்றியம் மேலாம்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட பூவன்குறிச்சி கிராமத்தில் சீரான குடிநீா் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.
இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு சில நாள்களாக குடிநீா் முறையாக விநியோகிக்கவில்லையாம். இதுகுறித்து தண்ணீா் திறக்கும் பணியாளா், ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, பெண்கள் உள்பட ஏராளமானோா் காலிக்குடங்களுடன் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வந்து, உடனடியாக குடிநீா் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.