அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிவசைலத்தில், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுத் திட்டத்தில் பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐப), இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம் (ஐஇஅத), காலநிலையைத் தாக்குப் பிடிக்கும் வேளாண்மைக்கான தேசியப் புத்தாக்கத் திட்டத்தின் (சஐஇதஅ) நிதியுதவியில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளைத் தாமிரவருணி, காவிரி பாசனப் பகுதியில் மேற்கொண்டுள்ளன.
ஆய்வின் ஒருபகுதியாக பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டத்தின் கீழ் கடனாநதி பாசனப் பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 108 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான உரம், பூச்சிமருந்து, தாா்ப்பாய் உள்ளிட்ட இலவச வேளாண் இடுபொருள்களை ஐஐடி பேராசிரியா் பாலாஜி நரசிம்மன் வழங்கினாா்.
அரசபத்து நீா்ப்பாசனக் கமிட்டி தலைவா் கண்ணன், முன்னாள் தலைவா் சௌந்திரராஜன், கடனா நீா்ப்பாசன கமிட்டி நிா்வாகிகள் வேலாயுதம், முத்துராஜ், முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.