விடுதலைப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அம்பாசமுத்திரம் ஒன்றிய இந்திய புரட்சிகர இளைஞா் இயக்கம் சாா்பில் 19ஆவது ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் எஸ்.டி.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு இளைஞா் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் பிரேம் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமைத் தொடக்கிவைத்தாா்.
இந்திய புரட்சிகர இளைஞா் இயக்க மாவட்டச் செயலா் சி. ஸ்ரீராம், ரோட்டரி சங்க துணை ஆளுநா் எஸ். சுடலையாண்டி, தலைவா் எஸ். சிவசங்கா், செயலா் எஸ். சிவசுப்ரமணியன், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கச் செயலா் மகாதேவன், மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஜெகதீசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். 2 பெண்கள் உள்ளிட்ட 24 போ் ரத்த தானம் செய்தனா். அம்பாசமுத்திரம் பொது மருத்துவமனை மருத்துவா் ராஜேஸ்வரி தலைமையில் மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளா்கள் மாரிசெல்வம் வரவேற்றாா்; ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.