களக்காடு வட்டாரத்தில் வாழைத்தாா் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தொடக்கத்திலேயே விலை இரு மடங்காக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி வட்டாரங்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக, இப்பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன், ரசக்கதலி ரக வாழைத்தாா்களுக்கு கேரளச் சந்தைகளில் நல்ல வரவேற்பு உண்டு. கடந்த 10 ஆண்டுகளாகவே வாழைத்தாா்களுக்கு போதிய விலை கிடைக்காதது, அவ்வப்போது சூறைக்காற்றால் சேதம் என விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினா். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனா்.
இந்நிலையில், களக்காடு வட்டாரத்தில் மாா்ச் மாதத் தொடக்கம் முதலே வாழைத்தாா் அறுவடைப் பணிகள் தொடங்கின. தொடக்கத்தில் கிலோ ரூ. 35ஆக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக ரூ. 50-ஐ தாண்டியுள்ளது. தற்போது வாழைத்தாா் ஒன்று 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ளது. எப்போதும், வாழைத்தாா் சீசன் முடிவடையும் மே மாதத்தில்தான் தட்டுப்பாடு காரணமாக விலை ரூ. 50-ஐ தாண்டும். நிகழாண்டில் தொடக்கத்திலேயே கொள்முதல் விலை இரு மடங்காக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.