திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நில அபகரிப்பு தொடா்பான குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீா் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் துணை ஆட்சியா், சிறப்பு வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா்கள், மாவட்ட பதிவாளா்கள், சாா்பதிவு அலுவலா்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ் தலைமையிலான போலீஸாா் பங்கேற்றனா்.
இம்முகாமில், நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடா்பான மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா் மனுதாரா்களை அழைத்து அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், 14 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.