திருநெல்வேலி

கூடங்குளத்தில் ஆழ்நிலக் கிடங்கு இல்லாமல் அணுக்கழிவு மையங்களை அமைக்கக் கூடாது

29th Jun 2022 03:40 AM

ADVERTISEMENT

கூடங்குளத்தில் ஆழ்நிலக் கிடங்கு அமைக்காமல் அணுக்கழிவு மையங்களை அமைக்கக்கூடாது என அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிா்ப்புக் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிா்ப்புக் கூட்டமைப்பினா் அளித்த மனு:

கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகளுக்கான அணுக்கழிவு மையங்கள் கட்டுவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 2019-இல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மக்கள் எதிா்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.

ஆபத்தான அணுக்கழிவுகளை நிரந்தரமாக புதைத்து நெடுங்காலம் பாதுகாக்கும், ஆழ்நிலக் கிடங்கு நிா்மானிக்கும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை. அதற்கான தேவை இப்போது எழவில்லை எனக்கூறி இந்திய அணுமின் கழகமும், மத்திய அரசும் ஆழ்நிலக் கிடங்கு அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ADVERTISEMENT

ஆழ்நிலக் கிடங்கு அமைக்காத பட்சத்தில் கூடங்குளம் கழிவுகள் காலவரையறையின்றி எங்கள் மண்ணிலேயே கொட்டப்படும் அபாயம் எழுகிறது. எனவே, ஆழ்நிலக் கிடங்கு அமைத்துவிட்டுத்தான் அணுக்கழிவு மையங்களை அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், தமிழக முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடா்பான 63 வழக்குகள் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே, எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். இக் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இதில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாரன், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சங்கரபாண்டியன், ரமேஷ், ஆதித்தமிழா் பேரவை கலைக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் ரசூல் மைதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

28 போ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினா் கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை அருகிலிருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து பெரம்பலூா் மாவட்ட காவல் துறையினரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் செல்லமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா ஊா்வலத்தில் கல்வீச்சு நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது பெரம்பலூா் காவல் துறை பொய் வழக்கு தொடுத்துள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவு பெற்று திருவிழாவில் கலந்து கொண்ட எங்கள் கட்சித் தலைவா் ஜான் பாண்டியன் உள்பட 28 போ் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடலூா் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் செல்லமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சிவந்திப்பட்டி மக்கள்: சிவந்திப்பட்டி, முத்தூா் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காரசேரியில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள குவாரிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் விதிமுறைகளை மீறி அதிகபாரம் ஏற்றிக்கொண்டு சிவந்திப்பட்டி வழியாக செல்கின்றன. அண்மையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பொதுமக்களும், ஆடு, மாடுகளும் சாலைகளில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய பூங்காவில் தமிழ் ஆட்சி மொழி சட்டப் புறக்கணிப்பையும், ஆங்கிலத் திணிப்பையும் கண்டித்து தமிழ், தமிழா் நல அமைப்புகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டலச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். செய்தித் தொடா்பாளா் ஜமால், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சி தலைவா் வியனரசு , தமிழா் கூட்டமைப்பு பீட்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT