திருநெல்வேலி

வள்ளியூா் அருகே குடிநீா் கேட்டு மறியல்

28th Jun 2022 03:12 AM

ADVERTISEMENT

வள்ளியூா் அருகே உள்ள கண்ணநல்லூரில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வள்ளியூா் அருகே உள்ள கண்ணநல்லூா், பனிசகுளம் கிராமங்களில் 1500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக குடிதண்ணீா் சீராக விநியோகம் செய்யவில்லையாம். இது தொடா்பாக ஊராட்சி மன்றத்தலைவா் மற்றும் வள்ளியூா் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கண்ணநல்லூா் காமராஜா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் கண்ணன், காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், தனிப்பிரிவு காவலா் மகராஜன் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனை அடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தனகிருபா பேரவைத் தலைவா் மு.அப்பாவுவின் கவனத்திற்கு கொண்டு சென்றாா். இதையடுத்து அதிகாரிகள் குடிநீா் வழங்க உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT